நீலகிரி, செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
|தமிழகத்தில் அனேக இடங்களில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் சற்று மழை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தமிழகத்துக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
அதன்படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (புதன்கிழமை) முதல் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வரையிலான 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை (வியாழக்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
நாளை மறுதினம் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.