விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில்நள்ளிரவில் இடி- மின்னலுடன் பலத்த மழைசுரங்கப்பாதை தண்ணீரில் சிக்கிய வேனை கயிறு கட்டி இழுத்து மீட்டனர்
|விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் விழுப்புரத்தில் உள்ள சுரங்கப்பாதை தண்ணீரில் சிக்கிய வேனை கயிறு கட்டி இழுத்து மீட்டனர்.
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் லேசான சாரல் மழை பெய்தது. அடுத்த சில நிமிடங்களில் பலத்த காற்றுடனும், பயங்கர இடி- மின்னலுடனும் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் 2 மணியளவில் பெய்யத்தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது.
தாழ்வான பகுதியில்தேங்கிய தண்ணீர்
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளான கணேஷ்நகர், கே.கே.நகர், சுதாகர் நகர், மணிநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
மேலும் பலத்த மழையினால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாதவாறு இருக்க நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். இதேபோல் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தண்ணீரில் சிக்கிக்கொண்ட வேன்
இந்த சூழலில் அங்கிருந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரை கடந்து சென்றுவிடலாம் என்று நினைத்து ஒரு வேனை அதன் டிரைவர் இயக்கினார். அப்போது அந்த வேன், அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் சிக்கிக்கொண்டது. அதில் பயணம் செய்த 8 பேர், வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்கள், தங்களை காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று கயிறு மூலம் அந்த வேனின் பின்புற பகுதியில் கட்டி, தீயணைப்பு வாகனத்தின் மூலமாக அந்த வேனை வெளியே கொண்டு வந்து 8 பேரையும் மீட்டனர். மேலும் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழைக்கு சேதமானதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேலும் விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர், வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் வெப்பம் தணிந்து நள்ளிரவில் இதமான குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மழை அளவு
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை அதிகபட்சமாக முகையூர் 63 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேபோல் வானூர் 60, செஞ்சி 58, வளத்தி 54, திண்டிவனம் 52, வளவனூர் 47,
முண்டியம்பாக்கம் 46.20, அனந்தபுரம் 46, கோலியனூர் 43, மரக்காணம் 39,
அவலூர்பேட்டை 33.40, கெடார் 33, மணம்பூண்டி 32, சூரப்பட்டு 30, செம்மேடு 27.60, விழுப்புரம் 24, வல்லம் 24, நேமூர் 18, கஞ்சனூர் 15, அரசூர் 9, திருவெண்ணெய்நல்லூர் 9 மில்லி மீட்டர் என்கிற நிலையில் மழை பதிவாகி இருந்தது.