சிவகங்கை
திருப்புவனம் பகுதியில் பலத்த மழை
|திருப்புவனம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்புகின்றன.
திருப்புவனம்,
திருப்புவனம் பகுதியில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்தியது. பின்பு இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. கடந்த 30-ந்தேதி பகலில் வெயில் அடித்தும் இரவில் 2 மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் மழை பெய்தது. நேற்று முன்தினம் பகலில் வெயில் கொளுத்தியது. இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கிராமப் பகுதிகள், கிராமச்சாலைகள், நெடுஞ்சாலைகள், வயல்வெளி பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி சிறிய குளம் போல் காட்சியளிக்கிறது. 2 நாட்கள் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் கிணறு, குளம், குட்ைட, ஊருணிகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
மழையின் காரணமாக இரவில் குளுமையான சூழ்நிலை நிலவுகிறது. மழை பெய்து கொண்டிருக்கும் போதே அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். கடந்த 30-ந்தேதி இரவு பெய்த மழையின் அளவு 100.06 மில்லி மீட்டராகும். 31-ந்தேதி பெய்த மழையின் அளவு 120.04 மில்லி மீட்டர் ஆகும். 2 நாட்களையும் சேர்த்து மொத்த மழையின் அளவு 220.10 மில்லி மீட்டராகும். மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பெய்யும் கன மழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மழை தண்ணீர் திருப்புவனம் படுகை அணையை தாண்டி ஆர்ப்பரித்து செல்கிறது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.