கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர் பகுதியில் கொட்டித்தீர்த்த மழை
|திருக்கோவிலூர் பகுதியில் கொட்டித்தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் பகுதியில் நேற்று காலை முதல் வெயில் வாட்டினாலும், மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு வந்து, இருள் சூழ்ந்து காணப்பட்டது. 4 மணிக் குமேல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால், தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளிகள் விடும் நேரத்தில் பெய்த இந்த மழையால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். இதேபோன்று மணம்பூண்டி, அரகண்டநல்லூர்பகுதியிலும் மழை நீடித்தது.
இதற்கிடையே, தொடர்ந்து பெய்து வரும் மழையால், திருக்கோவிலூர் வழியாக ஓடும் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதில் சிலர் ஆர்வமுடன் மீன்பிடித்து வந்ததையும் பார்க்க முடிந்தது.
மேலும், சாத்தனூர் அணையில் இருந்தும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதால், நீர்வரத்து இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.