< Back
மாநில செய்திகள்
திருவட்டார், அருமனை பகுதிகளில் கன மழை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

திருவட்டார், அருமனை பகுதிகளில் கன மழை

தினத்தந்தி
|
28 Nov 2022 12:15 AM IST

திருவட்டார், அருமனை பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த நிலையில் பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

திருவட்டார்,

திருவட்டார், அருமனை பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த நிலையில் பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

திருவட்டாரில் கன மழை

குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடங்கி இந்த மாதம் 2-வது வாரம் வரை கன மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று மாலை திருவட்டார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழை காங்கரை, கேசவபுரம், பிலாங்காலை, குலசேகரம், ஆற்றூர், சிதறால், மாத்தார், செறுகோல், வீயன்னூர், மாத்தூர், விளாக்கோடு, குமரன் குடி, வேர்க்கிளம்பி, முளவிளை, திருவரம்பு, இட்டகவேலி, தச்சூர், புத்தன்கடை, புலியிறங்கி, திற்பரப்பு, பூவன்கோடு ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சாலையில் திடீர் பள்ளம்

இதே போல் அருமனை பகுதியிலும் கன மழை பெய்தது. இதனால் அருமனை சந்திப்பு அருகில் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. அது தெரியாமல் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் பள்ளத்தின் மேல் ஒரு மேஜையை வைத்து, எச்சரிக்கை பலகையும் வைத்தனர்.

அதே சமயம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, முக்கடல், மாம்பழத்துறையாறு உள்ளிட்ட அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

நேற்று காலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 588 கனஅடி தண்ணீரும், சிற்றார்-1 அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும் பாசனத்துக்காக திறக்கப்பட்டது.

அதே சமயம் நேற்று காலை பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 77 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்தது. இதனால் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பேச்சிப்பாறை மற்றும் சிற்றார் 1 ஆகிய அணைகளில் இருந்து திறக்கப்படும் ஷிப்டு அடிப்படையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

விவசாய பணிகள்

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடியை தொடங்கி உள்ளனர். பல இடங்களில் நாற்று பாவுவதற்காக நிலம் தயார் செய்யப்பட்டு உள்ளது. சுமார் 6 ஆயிரம் எக்டேர் நில பரப்பளவில் கும்பப்பூ சாகுபடி செய்யும் வகையில் விவசாய பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இதே போல பாக்டம்பாஸ் உரம் போதுமான அளவுக்கு கொச்சியில் இருந்து ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்ய தயாராக உள்ளது.

மேலும் செய்திகள்