< Back
மாநில செய்திகள்
தஞ்சையில், 3½ மணி நேரம் வெளுத்து வாங்கிய கன மழை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சையில், 3½ மணி நேரம் வெளுத்து வாங்கிய கன மழை

தினத்தந்தி
|
3 Nov 2022 2:20 AM IST

தஞ்சையில், 3½ மணி நேரம் கன மழை வெளுத்து வாங்கியது. கடை, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

தஞ்சையில், 3½ மணி நேரம் கன மழை வெளுத்து வாங்கியது. கடை, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை பலத்த மழை இன்றி லேசான தூறலுடன் மழை காணப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலை தான் நீடித்தது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் லேசான தூறல் காணப்பட்டது. பின்னர் மழை இன்றி வெயில் அடித்தது. மாலை 3 மணிக்கு பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மாலை 4.20 மணிக்கு மழை பெய்யத்தொடங்கியது.

வெளுத்து வாங்கியது

லேசாக பெய்யத்தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக பெய்தது. தொடர்ந்து இரவு 7.50 மணி வரையில் இடைவிடாது 3½ மணி நேரத்திற்கும் மேல் இந்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

இந்த மழை காரணமாக தஞ்சையில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதேபோல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

தஞ்சை அண்ணாசிலை, ஆற்றுப்பாலம் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி இருந்தவர்கள் வாகனங்களை எடுப்பதில் சிரமம் அடைந்தனர். இதே போல் தஞ்சை ரெயில்வே கீழ்பாலம் பகுதியிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

கடை-வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

தஞ்சை மேலவீதி, வடக்கு வீதி பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் வாரியில் அடைப்பு ஏற்பட்டதால் காந்திஜி சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கடைக்காரர்கள் தங்களது கடைகளை பூட்டி விட்டு வெளியேறினர்.

இதேபோல் தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி வடகரை பகுதியில் மழைநீர் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்ததால் அங்கு வசித்து வரும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் குறுவை அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலைய பகுதிகளில் கொட்டி வைத்துள்ளனர். இந்த மழையினால் நெல் மணிகள் நனைந்தன.

மேலும் செய்திகள்