< Back
மாநில செய்திகள்
ஊட்டியில் கொட்டித்தீர்த்த கனமழை; காய்கறி தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது
மாநில செய்திகள்

ஊட்டியில் கொட்டித்தீர்த்த கனமழை; காய்கறி தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது

தினத்தந்தி
|
1 Sept 2023 3:14 AM IST

ஊட்டியில் கொட்டித்தீர்த்த கனமழையால் காய்கறி தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் ஒரு வாரத்திற்கு இடி-மின்னலுடன் கூடிய, லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று மழை வெளுத்து வாங்கியது.

முன்னதாக நேற்று காலை முதல் நன்றாக வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு பின்னர் வானம் மப்பும் மந்தாரமுமாக மாறியது. இதையடுத்து மதியம் 1 மணியிலிருந்து ஊட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து கொண்டே இருந்தது.

இதனால் ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து படகு இல்லம் செல்லும் ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி நின்றது. அந்த வழியாக வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. மேலும் ஊட்டி மார்க்கெட் முழுவதும் தண்ணீர் ஆறாக ஓடியதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். மழை பெய்ததால் ஓணம் விடுமுறைக்கு இங்கு வந்த சுற்றுலா பயணிகள் பெரும் சிரமம் அடைந்தார்கள்.

ஊட்டி சுற்று வட்டார பகுதியில் பெய்த கன மழை காரணமாக கேத்தி பாலாடா பகுதியில் காய்கறி தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதில் கேரட், பீட்ரூட், கிழங்கு பயிரிட்ட தோட்டங்களில் பல்வேறு ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சேதமாகியுள்ளது. இதேபோல் குன்னூர் கொல்லிமலை பகுதியில் பெய்த மழை காரணமாக உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது.

மேலும் செய்திகள்