< Back
மாநில செய்திகள்
குமரியில் பலத்த மழைசாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரியில் பலத்த மழைசாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

தினத்தந்தி
|
10 May 2023 2:22 AM IST

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழை

குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக மழை இல்லை. அதே சமயம் வெயிலின் தாக்கமும் பெரிதாக தெரியவில்லை.

இந்த நிலையில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. முன்னதாக காலையில் இருந்தே வானில் கருமேகங்கள் திரண்டு மழைக்கான அறிகுறிகள் காணப்பட்டன. பின்னர் மதியம் 2 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரலாக தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கியது. சுமார் 45 நிமிடங்கள் வரை மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் சாலையில் நடந்து சென்றவர்கள் கையில் குடை பிடித்தபடி சென்றனர். பெரும்பாலானோர் மழையில் நனைந்து கொண்டே சென்றனர்.

சாலைகளில் தண்ணீர்

மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த வகையில் செம்மாங்குடி ரோடு, கேப் ரோடு, கே.பி. ரோடு, ஆராட்டு ரோடு, கோர்ட்டு ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் ஓடியது. பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் சுமார் 2 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. மழை ஓய்ந்த பிறகு மெல்ல மெல்ல தண்ணீர் வடிந்தது.

இதேபோல கொட்டாரம், சாமிதோப்பு, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மேற்கு மாவட்ட பகுதிகளில் திருவட்டார், குலசேகரம் ஆகிய பகுதிகளில் இடி- மின்னலுடன் மழை பெய்தது. குளச்சல், கருங்கல், மார்த்தாண்டம், திங்கள்சந்தை மற்றும் மலையோர பகுதிகள், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

மேலும் செய்திகள்