< Back
மாநில செய்திகள்
குமரியில் பலத்த மழை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரியில் பலத்த மழை

தினத்தந்தி
|
1 Aug 2022 3:02 PM GMT

குமரி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பலத்த மழை

குமரி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்தநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும், மந்தாரமாக காட்சி அளித்தது. காலையில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரை பலத்த மழை பெய்தது.

இதனால் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மீனாட்சிபுரம் சாலை, ஒழுகினசேரி அவ்வை சண்முகம் சாலை, செட்டிகுளம் சாலை, கே.பி.ரோடு, கேப் ரோடு, வடசேரி ஆராட்டு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில சாலைகளில் கழவுநீருடன் மழைநீரும் கலந்து சென்றதை காண முடிந்தது.

சகதியாக மாறிய சாலை

மேலும் கோட்டார் சவேரியார் சந்திப்பு முதல் ஈத்தாமொழி சந்திப்பு, சவேரியார் சந்திப்பு முதல் செட்டிகுளம் சந்திப்பு வரையிலான சாலைகளில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்து, சாலைகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளித்த நிலையில் நேற்று பெய்த மழைக்கு அந்த சாலைகள் மேலும் மோசமாகி சகதிக்காடாக மாறின. அதில் பயணம் செய்த வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடுமையாக அவதிக்குள்ளானார்கள்.

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

இதேபோல் திருவட்டார், திருவரம்பு, பேச்சிப்பாறை, கோதையார், சிற்றார், மணலோடை, சுருளகோடு, ஆலஞ்சோலை, திற்பரப்பு, களியல் நெட்டா என மலையோர பகுதிகளிலும் மற்றும் குழித்துறை, அகஸ்தீஸ்வரம் என மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.

இதனால் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி என அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதே சமயத்தில் ஆறுகளில் தண்ணீர் செம்மண் நிறத்தில் சென்றது. மேலும் திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அருவியின் இடது புறம் உள்ள ஒரே பகுதி மட்டும் அனுமதிக்கப்பட்டது. ஏனைய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருப்பதற்காக கயிறு மூலமாக தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

பேச்சிப்பாறை அணைக்கு வரும் கோதையாறு, கும்பையாறு, மயிலாறு, மோதிரமலையாறு உள்ளிட்ட ஆறுகளில் மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல் பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளுக்கு தண்ணீர் வரத்து உள்ளது.

மழையின் காரணமாக பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்த நிலையில் பெருஞ்சாணி அணை நேற்று நண்பகல் 12 மணிக்கு மூடப்பட்டது.

மேலும் சிற்றாறு பட்டணம் கால்வாயில் குலசேகரம்-மாத்தூர் செல்லும் குருசுப்பாறை பகுதியில் உடைப்பு ஏற்பட்ட நிலையில், அதனை சீரமைக்கும் வகையில் சிற்றாறு அணை ஏற்கனவே மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில் உடைப்பை சீரமைக்கும் பணி காரணமாக குலசேகரம் கல்லடிமாமூடு சந்திப்பில் இருந்து கால்வாய் கரையோரமாக மாத்தூர் செல்லும் சாலை வழியான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

களியலில் 52.4 மி.மீ மழை

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பெருஞ்சாணி அணை- 45.4, புத்தன் அணை- 39.8, பேச்சிப்பாறை அணை- 7.4, சிற்றார் 1- 12.6, சிற்றார் 2- 28.4, மாம்பழத்துறையாறு அணை- 30, முக்கடல் அணை- 16.2, பூதப்பாண்டி- 10.2, கன்னிமார்- 3.2, குழித்துறை- 31, மயிலாடி- 3.2, நாகர்கோவில்- 2, சுருளக்கோடு- 29.2, தக்கலை- 25, குளச்சல்- 4.6, இரணியல்- 3, பாலமோர்- 31.4, கோழிப்போர்விளை- 5.4, அடையாமடை- 19.2, குருந்தங்கோடு- 2.2, முள்ளங்கினாவிளை- 25.6, ஆனைக்கிடங்கு- 28 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக களியல் பகுதியில் 52.4 மி.மீ. அளவுக்கு மழை பெய்திருந்தது.

மேலும் செய்திகள்