கன்னியாகுமரி
குமரியில் கொட்டி தீர்த்த கனமழை
|குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 2 நாட்களில் 4¾ அடி உயர்ந்துள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 2 நாட்களில் 4¾ அடி உயர்ந்துள்ளது.
கன மழை
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே பெய்து வந்த சாரல் மழை தற்போது கனமழையாக மாறியுள்ளது. அந்த வகையில் கடந்த 4 நாட்களாகவே மாவட்டம் முழுவதும் இடைவிடாது மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பாய்ந்தோடியது. வயல்கள், தோட்டங்கள் மற்றும் தோப்புகளுக்குள்ளும் மழை நீர் குளம் போல தேங்கி நின்றது. கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. முக்கியமாக பழையாற்று கால்வாயில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குருந்தன்கோட்டில் 134 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
மழை அளவு
மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் மி.மீ. வருமாறு:- பூதப்பாண்டி-60.4, களியல்-37, கன்னிமார்-30.2, கொட்டாரம்-82.2, குழித்துறை-45.4, மயிலாடி-74.2, நாகர்கோவில்-97.2, புத்தன்அணை-15.8, சுருளகோடு-25.2, தக்கலை-54.3, குளச்சல்-38, இரணியல்-72, பாலமோர்-62.4, திற்பரப்பு-35.5, ஆரல்வாய்மொழி-28.8., கோழிப்போர்விளை-73, அடையாமடை-75.3, முள்ளங்கினாவிளை-61.6, ஆனைகிடங்கு-70 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.
மேலும் அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை-29.6, பெருஞ்சாணி-14.2, சிற்றார் 1 -35.2, சிற்றார் 2 -38.8, மாம்பழத்துறையாறு-72, முக்கடல்-20.3 என்ற அளவில் மழை பெய்து இருந்தது.
அணை நிலவரம்
மழை பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் பேச்சிப்பாறை அணைக்கு நேற்று வினாடிக்கு 2,127 கனஅடி தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,939 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 396 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 266 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 28 கனஅடியும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 11.2 கனஅடியும் தண்ணீர் வருகிறது.
அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 332 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதே போல சிற்றார் 1 அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் கால்வாயில் செல்கிறது. நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த 2 நாட்களில் 9 அடி உயர்ந்த பெருஞ்சாணி அணை நேற்று ஒரே நாளில் 3.20 அடி உயர்ந்தது. அதாவது 52.60 அடியில் இருந்து 55.80 அடியாக உயர்ந்துள்ளது. இதே போல கடந்த 2 நாட்களில் பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 4.76 அடி உயர்ந்தது. 24.93 அடியில் இருந்து 29.69 அடியாக உயர்ந்துள்ளது.
இதே போல தண்ணீர் வற்றி குட்டை போல காட்சி அளித்த மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 5.41 அடியில் இருந்து 11.15 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5.74 அடி உயர்ந்துள்ளது.
முக்கடல்
நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் முக்கடல் அணையில் தண்ணீர் வற்றி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது அணைக்கு தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் நேற்று பிளஸ் 4.60 அடியானது.