தேனி
கடமலைக்குண்டு பகுதியில் கனமழை:நிரம்பி வரும் தடுப்பணைகள்
|கடமலைக்குண்டு பகுதியில் பெய்த தொடர் மழையால் தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன.
கடமலை-மயிலை ஒன்றியம் கண்டமனூர், கடமலைக்குண்டு, குமணன்தொழு, கருப்பையாபுரம், வருசநாடு, முருக்கோடை உள்ளிட்ட கிராமங்களில் ஓடைகளின் குறுக்கே கடந்த சில மாதங்களுக்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டும் பணிகள் தொடங்கியது. இதில் பெரும்பாலான தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டது. ஒரு சில தடுப்பணைகளில் மட்டும் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக அந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடமலைக்குண்டு, முத்தாலம்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டு புதிதாக கட்டப்பட்ட தடுப்பணைகளில் நீர் நிரம்பி வருகிறது. குறிப்பாக கடமலைக்குண்டு கிராமத்தில் கன்னிமார் கோவில் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 2 தடுப்பணைகளிலும் முழுமையாக நீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.