கடலூர்
கடலூரில் சாரல் மழை
|வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூரில் நேற்று சாரல் மழை பெய்தது. மேலும் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டது.
வங்கக்கடலில் கடந்த 28-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த பகுதியாகவும், அதையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி கடலோர மாவட்டமான கடலூரில் நேற்று காலை வானம் மேக மூட்டமாக இருந்தது. சற்று நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது. சில நேரங்களில் வெயிலும், பெரும்பாலான நேரங்களில் வானம் மேக மூட்டமாகவும் காணப்பட்டது.
கடல் சீற்றம்
இதேபோல் சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, கிள்ளை, அண்ணாமலைநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது. இருப்பினும் இந்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் சீறி பாய்ந்ததால் தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் சில அடி தூரத்துக்கு மண் அரிப்பு ஏற்பட்டது.
கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த மீனவரின் படகு ஒன்றின் பெரும்பகுதி மணலால் மூடப்பட்டது. பின்னர் அந்த படகை மீனவர்கள் கடற்கரையோரம் இழுத்து வைத்தனர். தாழங்குடா பகுதி மீனவர்களும் தங்கள் படகுகளை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தினர். இருப்பினும் நேற்று காலை முதல் அலையின் வேகம் சற்று குறைந்து காணப்பட்டது.