தஞ்சாவூர்
கும்பகோணம், பாபநாசம் பகுதியில் பலத்த மழை
|கும்பகோணம் , பாபநாசம் பகுதியில் பெய்த கனமழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கும்பகோணம்;
கும்பகோணம் , பாபநாசம் பகுதியில் பெய்த கனமழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
அறுவடை பணிகள் பாதிப்பு
தஞ்சை மாவட்டம் பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூா், பகுதியில் நேற்று மாலை சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை பெய்தது.ஒரு மணிநேரத்திற்கு மேல் பெய்த கனமழை காரணமாக சாலை, தெருக்களில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல், வாய்க்கால்கள் மழைநீரால் நிரம்பி வருகிறது. மேலும் பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறுவை முன்பருவத்தில் நடவு செய்த நெற்பயிர்கள் அறுவடை பருவத்தில் உள்ள நிலையில் தொடர்மழை காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் அறுவடை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வேதனை
இன்னும் சில விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல்நிலையத்தில் விற்பனைக்கு கொட்டி வைத்துள்ள நிலையில் தொடர் மழையின் காரணமாக நெல்கொள்முதல் செய்யும் பணியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய நேரத்தில் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மழைநீடித்தால் குறுவை சாகுபடி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பாபநாபம்
பாபநாசம் பகுதிகளில் நேற்று மாலை 1 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை தொடர்ந்து பெய்தது. நகரின் பல பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.கபிஸ்தலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக தற்போது பயிரிடப்பட்டுள்ள முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. கபிஸ்தலம் பகுதியில் பருத்தி பஞ்சு 2-ம் பாகம் எடுக்கும் பணி தற்போது நடக்கிறது. மழை காரணமாக வெடித்த பஞ்சுகள் நனைந்து உள்ளன.
கும்பகோணம்
கும்பகோணம் பகுதியில் நேற்று மதியம் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டனர்.கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள குறுவை பயிர் மற்றும் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா பருவத்திற்கான நாற்றுகள் மழைநீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.மதுக்கூர், வேப்பங்குளம், கண்டியங்காடு, தளிக்கோட்டை ஆகிய ஊர்களில் நேற்று மாலை 5 மணியளவில் கன மழை பெய்தது. கன மழை காரணமாக வயல்கள், தென்னந்தோப்பில் தண்ணீர் தேங்கி நின்றது.