மதுரை
பேரையூர் பகுதியில் பலத்த மழை; மின்னல் தாக்கி, ஆடு மேய்த்தவர் சாவு - சுவர் இடிந்து 4 பேர் காயம்
|பேரையூர் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்தவர் பலியானார். சுவர் இடிந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பேரையூர்
பேரையூர் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்தவர் பலியானார். சுவர் இடிந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மின்னல் தாக்கி ஆடு மேய்த்தவர் சாவு
மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பேரையூரில் நேற்று மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கோடை மழை கொட்டி தீர்த்தது.
பேரையூர் அருகே சின்ன ரெட்டிபட்டி காட்டுப்பகுதியில் பேரையூரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சசி (வயது 28) அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து நாகையாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சுவர் இடிந்து 4 பேர் காயம்
பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டி வாழைத்தோப்பு பகுதியில் பெய்த மழையால் பட்டுப்புழு வளர்ப்பு கூடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் அதே ஊரை சேர்ந்த முத்துராஜ் (40), ராஜாத்தி (35), செல்வ பவித்ரா (5), டேவிட் (25) ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. இவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவங்கள் குறித்து பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.