புதுக்கோட்டை
அன்னவாசல், கீரமங்கலம் பகுதிகளில் கனமழை
|அன்னவாசல், கீரமங்கலம் பகுதிகளில் கன மழை பெய்தது.
கனமழை
அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் இன்று மாலை அன்னவாசல், சித்தன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, குடுமியான்மலை, வயலோகம், கீழக்குறிச்சி, இலுப்பூர், மலைக்குடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கீரமங்கலம்
கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று கனமழை பெய்தது. இந்த மழையால் சாலை ஓரங்களில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் பல வருடங்களாக சீரமைக்கப்படாததால் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மழைத்தண்ணீர் சாலைகளில் ஓடி ஆங்காங்கே தேங்கி சாலைகள் உடைந்து நாசமாகி வருவதுடன் கீரமங்கலம் அக்னிப்பஜார் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள், சாலையோர வாய்க்கால்கள் முற்றிலும் காணாமல் போனதால் கடைவீதிகளில் சாலையிலேயே மழைத்தண்ணீர் தேங்கி நின்றது.
மழைநீர் புகுந்தது
இதேபோல பல இடங்களில், சில வீடுகளுக்குள்ளும் மழைத் தண்ணீர் சென்றது. ஆகவே சாலையோர வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்களை சீரமைத்தால் தண்ணீர் தேங்காமலும், சேதங்கள் ஏற்படாமலும் தவிர்க்கலாம். மேலும் சாலை மராமத்துப் பணிகள் நடக்கும் போது சாலையோர வடிகால் வாய்க்கால்களை சீரமைக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வாய்க்கால்களை சீரமைத்தால் சாலைகளும் பாதுகாப்பதுடன் மழைத்தண்ணீர் குடியிருப்புகளுக்குள் செல்லாமல் நீர்நிலைகளுக்கு சென்று குளம், குட்டைகளில் தண்ணீரை சேமிக்கலாம் என்று பொதுமக்கள் கூறினர்.