கரூர்
கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
|கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
கனமழை
கரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கடந்த 14-ந்தேதி இரவு சுமார் 11 மணி முதல் நேற்றுமுன்தினம் காலை வரை கரூர் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை 8 மணி நிலவரப்படி 470.40 மில்லி மீட்டர் மழை பெய்தது.
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
இதேபோல் நேற்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் 59.60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 500 மில்லி மீட்டரை தாண்டி மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நொய்யல்
நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர். இந்த மழையால் வாடிய பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. மேலும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.