திருவாரூர்
3-வது நாளாக பலத்த மழை
|மன்னார்குடி, திருமக்கோட்டை பகுதிகளில் 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர
மன்னார்குடி:
மன்னார்குடி, திருமக்கோட்டை பகுதிகளில் 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பலத்த மழை
மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளான பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டினம், கண்டிதம்பேட்டை, சேரன்குளம், மூவாநல்லூர், காரிக்கோட்டை, மேலவாசல், பாமணி உள்ளிட்ட பகுதிகள் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை மழைநின்றதால் எந்திரம் மூலம் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டனர்.
இதை தொடந்து மழை பெய்ததால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது. வயல்களில் மழைநீர் தேங்கியதால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து நெற்பயிர்கள் சாய்ந்தன. 3-வது நாளாக நேற்று பெய்த மழையால் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி உள்ளது.
வயல்களில் மழைநீர் வடியாமல் இருந்தால் நெல் மணிகள் முளைக்க தொடங்கி விடும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நெற்பயிர்கள் சாய்ந்தன
திருமக்கோட்டையில் நேற்று 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன.. நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மழையால் நனைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கன மழை பெய்து வருவதால் கால்நடைகளுக்கு வேண்டிய வைக்கோல் தீவனம் அழுகிவிட்டதால் இனி வரும் நாட்களில் வைக்கோல் தட்டுப்பாடும் நிலவும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.