வேலூர்
இடி, மின்னலுடன் 2 மணி நேரம் பலத்த மழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
|வேலூரில் இடி, மின்னலுடன் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
வேலூரில் இடி, மின்னலுடன் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
பலத்த மழை
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாலாற்றிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வேலூரில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் பிற்பகல் 2.30 மணி அளவில் திடீரென வெயிலுடன் கூடிய லேசான மழை பெய்தது. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.
சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக நிக்கல்சன்கால்வாய் ஒட்டியுள்ள பகுதிகளான கன்சால்பேட்டை, திடீர்நகர், இந்திராநகர், தோட்டப்பாளையம், புதுக்குடியான் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அண்ணாசாலை, ஆரணிசாலை, ஆற்காடு சாலை, மக்கான் பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி காணப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
பாதாளசாக்கடை, கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறும் தெருக்கள் சேறும், சகதியுமாக மாறியது. ஆங்காங்கே இருசக்கர வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் மற்றும் கடைகள் முன்பு தஞ்சம் அடைந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் அவதியடைந்தனர்.
மழை நின்ற பின்னர் வெயில் அடித்தது. அண்ணாசாலை, ஆரணி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றது. அப்போது அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று நெரிசலில் சிக்கிக்கொண்டது. சுமார் அரை மணிநேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது.
காட்பாடியிலும் மழை
காட்பாடியில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. பகல் 2.30 மணிக்கு திடீரென மழை பெய்தது. சுமார் ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மாலையிலும் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது.
இதேபோல கழிஞ்சூர், வஞ்சூர், தண்டல கிருஷ்ணாபுரம், காந்திநகர், பிரம்மபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் மழை பெய்தது.