சென்னை
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை எதிரொலி சென்னையில் 17 விமானங்கள் தாமதம் 4 விமானங்கள் ரத்து
|கேரளா உள்பட சில மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு திருச்சி செல்ல வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாக செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடும் அவதிக்குள்ளான பயணிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காலை 9.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த விமானத்தை திருச்சிக்கு மாற்றி விட்டனர். அதன்படி திருச்சிக்கு காலை 10.15 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது.
அதேபோல் சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, ஆந்திர மாநிலம் கடப்பா, திருச்சி, கோவா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும், கோழிக்கோடு, திருச்சி, அந்தமான், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய விமானங்களும் என 17 விமானகள் சுமார் 1 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை தாமதமாக சென்று வந்தன.
மேலும் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல வேண்டிய 2 விமானங்களும், மதுரையில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.