< Back
மாநில செய்திகள்
குமரியில் விடிய விடிய கனமழை... பேச்சிப்பாறை அணையில் அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் ஆய்வு...!
மாநில செய்திகள்

குமரியில் விடிய விடிய கனமழை... பேச்சிப்பாறை அணையில் அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் ஆய்வு...!

தினத்தந்தி
|
17 Dec 2023 4:11 PM IST

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி,

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது.

அதன்படியே, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் நேற்றிலிருந்து விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து சார் ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவர் இதுகுறித்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், 'குமரியில் தொடர்மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை அணை நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து சார் ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் ஆய்வு செய்து, கால்வாய், குளம் உட்பட நீர்நிலை சார்ந்த கட்டமைப்புகளில் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தியிருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்