திருவாரூர்
கூத்தாநல்லூர், வலங்கைமானில் பலத்த மழை
|கூத்தாநல்லூர், வலங்கைமானில் பலத்த மழை பெய்தது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில், கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் பெய்த பலத்த மழையால் கடைத்தெரு, குடவாசல் ரோடு, பாபநாசம் ரோடு, கும்பகோணம் ரோடு சந்திக்கும் நான்கு வழி சாலை பகுதியில், தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் உரிய வடிகால் வசதியை ஏற்படுத்தாததால் தண்ணீர் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர் கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுவதாகவும் மககள் கவலை தெரிவிக்கின்றனர். எனவ மழைநீர் தேங்காமல் உடனடியாக வடிந்து செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நன்னிலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் விட்டு விட்டு பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நன்னிலம், பேரளம், பூந்தோட்டம், ஆண்டிப்பந்தல், மாப்பிள்ளை குப்பம், வண்டாம் பாளை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. தொடர் மழையால் சம்பா பயிர்கள் பாதிக்கப்படுமோ? என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.