நாகப்பட்டினம்
நாகையில், சுட்டெரிக்கும் வெயில்
|கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே நாகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே நாகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
பருவ நிலை மாற்றம்
வெயில் அடிக்க வேண்டிய நேரத்தில் மழை பெய்வது, மழை பெய்ய வேண்டிய நேரத்தில் வெயில் அடிப்பது, அதிகப்படியான பனிப்பொழிவு என பருவ நிலை தொடர்ந்து மாற்றம் கண்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா, இன்புளூயன்சா என பல்வேறு விதமான மர்ம காய்ச்சலால் அவதிப்படும் மக்கள், பருவ நிலை மாற்றத்தால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.
பருவ நிலையை நம்பி விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகளும் புலம்பி தவிக்கிறார்கள்.
வெயிலின் தாக்கம்
பொதுவாக கோடைகாலத்திலும், அதையொட்டி வரும் அக்னிநட்சத்திர நாட்களிலும் தான் வெயில் வாட்டி வதைக்கும். ஆனால் தற்போது கோடைக்கு முன்பாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது.
நாகை மாவட்ட பகுதிகளில் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வெயில் கொளுத்தும். அதிலும் அக்னி நட்சத்திர நாட்களில் மக்கள் வெளியே வர முடியாதபடி வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.
ஆனால் மிதமாக வெயில் அடிக்க வேண்டிய இந்த காலத்தில் கோடை வெயிலு அக்னி நட்சத்திரத்தைப் போல் வெயில் சுட்டெரித்து வருகிறது.
வெளியில் செல்ல தயக்கம்
நாகை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வெயில் கொடுமையினால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு தயங்குகின்றனர். வேறு வழி இல்லாத நிலையில் குடை பிடித்துக் கொண்டும், வாகனங்களில் செல்பவர்கள் துணியால் முகம் மற்றும் தலையை தலையை மூடிய படியும் வெளியில் சென்று வருகின்றனர்.
பகலில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்படுகிறது. மின்விசிறியில் இருந்து வரும் காற்று கூட சில நேரங்களில் அனலாக கொதிக்கிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கு வெயில் அடித்து வருகிறது. நாகையை பொறுத்த மட்டில் வெயில் அளவு இன்னும் 100 டிகிரியை எட்டவில்லை. நேற்று 94 டிகிரி வரை வெயில் அடித்தது. இப்போதே இந்த அளவு என்றால் போகப்போக நிலை என்னாகுமோ? என மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
நடமாட்டம் குறைந்தது
நேற்று காலை 9 மணி முதலே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. 12 மணிக்கு பிறகு வெயிலின் சூடு தாங்க முடியாமல் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். மண்டையைப் பிளக்கும் அளவுக்கு வெயில் அடித்ததால் நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு, ஆஸ்பத்திரி ரோடு, நீலாவீதி, நாகை- நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட நகரின் போக்குவரத்து மிகுந்த சாலைகள் மதிய வேளையில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீர், தர்பூசணி, சர்பத், ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் விரும்பி வாங்கி பருகினர். இதனால் குளிர்பானங்களின் விற்பனையும் சூடு பிடித்தது.