சேலம்
ஏற்காட்டில் கடும் மேக மூட்டம்
|தொடர் கனமழையால் ஏற்காட்டில் நேற்று கடும் மேகமூட்டம் காணப்பட்டது. எனவே வாகனங்களை பாதுகாப்பாக இயக்க கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.
ஏற்காடு:
தொடர் கனமழையால் ஏற்காட்டில் நேற்று கடும் மேகமூட்டம் காணப்பட்டது. எனவே வாகனங்களை பாதுகாப்பாக இயக்க கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.
மேக மூட்டம்
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஏற்காட்டில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள மலைப்பாதையில் நீர்வீழ்ச்சி ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணமுடிகிறது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்தநிலையில், விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டிற்கு கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். பின்னர் அவர்கள் அண்ணா பூங்கா, படகு இல்லம், ரோஜா தோட்டம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிபார்த்து மகிழ்ந்தனர்.
ஏற்காட்டில் நேற்று காலை முதல் மாலை வரையிலும் வெயில் அடிக்காததாலும், ேமகமூட்டம் அதிகமாக இருந்ததாலும் குளிர்ந்த காற்று வீசியது. இதனிடையே, ஏற்காட்டில் இருந்து சேலம் வரும் மலைப்பாதையில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் அதிகமான ேமக மூட்டம் காணப்பட்டது.
கலெக்டர் வேண்டுகோள்
இதனால் ஏற்காட்டிற்கு வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் சேலத்திற்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டனர். இதன் காரணமாக மிக கவனத்துடன் சாலை விதிகளை முழுமையாக பின்பற்றி பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுமாறும், வாகன ஓட்டிகள் ஒரே நேரத்தில் சேலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.
குறிப்பாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தற்போது ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வருகையை ஓரிரு நாட்கள் தாமதமாக முடிவு செய்யலாம் எனவும், ஏற்கனவே திட்டமிட்டு இருந்தால் பாதுகாப்பான முறையில் நிதானமாக வாகனத்தை இயக்கும்படியும் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.