< Back
மாநில செய்திகள்
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், ரேலா ஆஸ்பத்திரியில் ஏழை விவசாயிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை
சென்னை
மாநில செய்திகள்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், ரேலா ஆஸ்பத்திரியில் ஏழை விவசாயிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை

தினத்தந்தி
|
16 Dec 2022 6:47 AM GMT

முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ரேலா ஆஸ்பத்திரியில் ஏழை விவசாயிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக நடந்தது. ‘கணவருக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது’ என மனைவி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

சேலத்தை சேர்ந்த மோகன பெருமாள் (வயது 36) என்ற விவசாயி 8 ஆண்டுகளுக்கும் மேலாக அடிவயிறு சார்ந்த பிரச்சினைகளால் கடும் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சையும் பெற்றார். ஆனாலும் அதிக கட்டணம் காரணமாக அங்கு சிகிச்சை பெறமுடியவில்லை.

இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ரேலா ஆஸ்பத்திரிக்கு வந்தார். பரிசோதனையில் அவரது இதயம் 15 சதவீதம் மட்டுமே செயல்படுவதும், உயிர் வாழ இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழி என்றும் கண்டறியப்பட்டது.

பல லட்சங்கள் வரை செலவாகும் இச்சிகிச்சை, ரேலா ஆஸ்பத்திரியில் தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நன்கொடையாளர்களிடம் இருந்து இதயம் கிடைத்தபோதிலும், அது அவருக்கு பொருந்தவில்லை.

18 மாத காத்திருப்புக்கு பிறகு, அவருக்கு சரியாக பொருந்தக்கூடிய வகையில் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்த இளைஞரிடம் இருந்து இதயம் கிடைத்தது. ரேலா ஆஸ்பத்திரி டாக்டர் பிரேம் ஆனந்த் ஜான் தலைமையில் 6 பேர் கொண்ட குழு மதுரைக்கு சென்று இதயத்தை பெற்று வந்தனர்.

அதனைத்தொடர்ந்து சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில், விவசாயி மோகன பெருமாளுக்கு ரேலா ஆஸ்பத்திரியின் நுரையீரல் மற்றும் இதய அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர்கள் குழு வெற்றிகரமாக இதயத்தை பொருத்தியது.

அதனைத்தொடர்ந்து சில நாட்கள் சிகிச்சைக்கு பின்பாக மோகனபெருமாள் சமீபத்தில் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். இந்தநிலையில் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக மோகன பெருமாள் மற்றும் அவது குடும்பத்தினரும், ரேலா ஆஸ்பத்திரியும் இணைந்து ஆஸ்பத்திரி வளாகத்திலேயே நேற்று மரக்கன்றை நட்டனர்.

இதுகுறித்து ரேலா ஆஸ்பத்திரி தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி கூறியதாவது:-

தமிழக அரசின் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும்தான் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் ஏழை மக்களுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைகள் செய்ய வாய்ப்புள்ளது. மோகன பெருமாள், தமிழகத்தில் பிறந்ததால் அவருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசின் இதுபோன்ற திட்டங்கள் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

இதய மாற்று அறுவை சிகிச்சையில் பங்கேற்ற டாக்டர்கள் குழுவினருக்கு எனது பாராட்டுகள். இது ஒரு கூட்டு முயற்சியாகும். இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் மோகன பெருமாள் தற்போது நன்றாக இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயி மோகன பெருமாளின் மனைவி லட்சுமி கூறுகையில், ''ரேலா ஆஸ்பத்திரிக்கும், அதன் டாக்டர்கள் குழுவுக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவர்களாலேயே நாங்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறோம். எனது கணவருக்கு இப்போது ஒரு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இது இல்லாவிட்டால் எனது கணவரின் உயிரைக் காப்பாற்றி இருக்க முடியாது'', என்று ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்