மதுரை
மதுரையில் இருந்து ஆம்புலன்சுகள் தடையின்றி செல்ல போலீசார் நடவடிக்கை: மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், கல்லீரல் தானம் - கோவை, புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டன
|மூளைச்சாவு அடைந்த சாத்தூர் வாலிபரின் இதயம், கல்லீரல் ஆகியவை தானம் அளிக்கப்பட்டதால், அவை கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு ஆம்புலன்சுகள் மூலம் போலீசார் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டன.
மூளைச்சாவு அடைந்த சாத்தூர் வாலிபரின் இதயம், கல்லீரல் ஆகியவை தானம் அளிக்கப்பட்டதால், அவை கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு ஆம்புலன்சுகள் மூலம் போலீசார் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டன.
சாலை விபத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 33). இவர் சில நாட்களுக்கு முன்பு, மோட்டார் சைக்கிளில் விருதுநகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வம், சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து செல்வத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து டாக்டர்கள், அவரின் உறவினர்களிடம் விளக்கினர். அதன் பின்னர், உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.
இதயம், கல்லீரல்
கோவை ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு நோயாளிக்கு செல்வத்தின் இதயமும், புதுக்கோட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு கல்லீரலும் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அந்த உடல் உறுப்புகளை சாலை மார்க்கமாக கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாநகர கூடுதல் துணை கமிஷனர் திருமலைக்குமார், போக்குவரத்து உதவி கமிஷனர் செல்வின், இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, தங்கபாண்டி மற்றும் போலீஸ் அதிகாரிகள் இணைந்து, ஆம்புலன்சுகள் தடையின்றி விரைவாக செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, நேற்று காலை 10.20 மணியளவில் வேலம்மாள் ஆஸ்பத்திரியில் இருந்து இதயம் கோவை ஆஸ்பத்திரிக்கும், புதுக்கோட்டைக்கு கல்லீரலும் ஆம்புலன்சுகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன. ஆம்புலன்சுகள் இடையூறின்றி செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.