< Back
மாநில செய்திகள்
நீண்ட கால பகையை இதயம் தகர்த்தது: பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு சென்னையில் அறுவை சிகிச்சை
மாநில செய்திகள்

நீண்ட கால பகையை இதயம் தகர்த்தது: பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு சென்னையில் அறுவை சிகிச்சை

தினத்தந்தி
|
29 April 2024 4:55 AM IST

பாகிஸ்தான் இளம்பெண் ஆயிஷாவுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

சென்னை,

இந்தியாவின் மருத்துவ நகரமான சென்னையில் பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணுக்கு 69 வயது இந்தியரின் இதயம் பொருத்தப்பட்ட நிகழ்வு நடந்திருக்கிறது. அதாவது, பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தை சேர்ந்த ஆயிஷா ரஷீது (வயது 19). இவருக்கு 7 வயது இருக்கும்போது, இதயத்தில் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த அவருக்கு, பிரச்சினை பெரிதான நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு மேல் சிகிச்சைக்காக சென்னை வந்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அவருக்கு செயற்கை இதய துடிப்பு கருவி பொருத்தப்பட்டது.

அதன்பின்னர், உடல் நலம் பெற்று நாடு திரும்பிய ஆயிஷாவுக்கு மீண்டும் இதய பிரச்சினை ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் சிகிச்சைக்காக சென்னை வந்தார். ஒரு பக்கம் உடல் நலம் இல்லாமலும், மற்றொரு பக்கம் நிதி நெருக்கடியாலும் அவர் கஷ்டப்பட்டார். அவரது நிலையை உணர்ந்த, சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை அவருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தது. ஆனால், இதயம் தானமாக கிடைக்காத நிலையில், 10 மாதங்களாக தொடர் சிகிச்சையிலேயே காத்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி டெல்லியில் இருந்து 61 வயது இந்தியரின் இதயம் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. அதே நேரத்தில், ஆயிஷாவுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய, இதய மாற்று அறுவை சிகிச்சையின் தலைவரான டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

ஆயிஷாவுக்கு பல மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் மூலம் மாற்று இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது, அவர் நலமாக உள்ளார். விரைவில், நாடு திரும்ப இருக்கிறார். இதுகுறித்து ஆயிஷா கூறும்போது, "எனக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய அரசாங்கத்திற்கு நன்றி. நான் நிச்சயமாக மீண்டும் ஒரு நாள் இந்தியா திரும்புவேன். எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி'' என்று கூறினார்.

ஆயிஷாவின் தாயார் சனோபர் கூறும்போது, "எனது மகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு பாகிஸ்தான் பெண்ணுக்குள் ஒரு இந்திய இதயம் துடிக்கிறது என்பதில் எனக்கும் மகிழ்ச்சி. இது ஒருபோதும் சாத்தியமில்லை என்று நான் நினைத்தேன், ஆனால் அது நடந்திருக்கிறது'' என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

மேலும் செய்திகள்