சசிகலா மேல்முறையீட்டு மனு மீது சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
|சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளராக பதவி வகித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியின் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவும், துணைபொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா, தினகரன் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்திருந்த நிராகரிப்பு மனுவை விசாரணைக்கு ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கை தொடர சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என கூறி அவரது மனுவை நிராகரித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்தார். நீண்டகாலமாக நிலுவையில் இருந்துவரும் மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கோரி சசிகலா தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், அந்தவழக்கு இன்றைக்கு (ஆக.30-ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று ஒப்புதல் தெரிவித்திருந்தனர்.
இதன்படி சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற உள்ளது.