கள்ளக்குறிச்சி
பொதுமக்களின் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம்
|கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் கருத்துக்களை அறிய கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் ஏற்கனவே கொடுத்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட 11 பேர் கலந்து கொண்டனர். மேலும் புதிதாக கொடுத்த 9 பேரின் மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. இதில் சட்டம்-ஒழுங்கு, நில அபகரிப்பு மற்றும் பணமோசடி, தொடர்பாக அளித்த மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டுள்ளதா? என போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் புகார்தாரர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சுமார் 15 பேரின் மனுக்களை மறு விசாரணை நடத்தி விரைந்து தீர்வு காண சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார். இதில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.