< Back
மாநில செய்திகள்
சாலை அமைக்க தோண்டிய பள்ளத்தில் குவியல் குவியலாக எலும்புகள் - ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு
மாநில செய்திகள்

சாலை அமைக்க தோண்டிய பள்ளத்தில் குவியல் குவியலாக எலும்புகள் - ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு

தினத்தந்தி
|
17 Nov 2022 5:49 PM IST

ஸ்ரீவைகுண்டம் அருகே சாலை அமைக்க தோண்டிய பள்ளத்தில் குவியல் குவியலாக எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்துங்கநல்லூர்,

ஸ்ரீவைகுண்டம் அருகே பொருநையின் கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். தன் பெயரிலே ஆதியை தாங்கி நிற்கும் இவ்வூருக்கு அடையாளம் கொடுத்தவர் தொல்லியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் ரியா. கடந்த 1899-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்திய இவருக்கு பல அரிய தொல்பொருட்கள் கிடைத்தது.

இதனை முறையான ஆய்வுக்கு உட்படுத்தி ஆதிச்சநல்லூரின் தொன்மையை ஆய்வு அறிக்கையாக வெளியிட்டார். மேலும், பொருநையின் கரையில் அமைந்துள்ள பல்வேறு ஊர்களில் சிறிய ஆய்வுகளை நடத்தி 37 தொல்லியல் களங்களையும் கண்டறிந்தார். இவற்றில் ஒன்றுதான் பொருநையின் வடகரையில் அமைந்துள்ள கொங்கராயக்குறிச்சி.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக முதுகோனூர் என்ற பழம்பெயர் கொண்ட இவ்வூரின் காடு, திரடு போன்ற இடங்களில் தொல் பொருட்கள் கிடைத்து வருகிறது.

எனவே, தாழிக்காட்டில் புதைந்த மனிதர்கள் வாழ்ந்த இடமாக இவ்வூர் இருந்திருக்க வேண்டும் என்ற அலெக்சாண்டர் ரியாவின் கருத்தை முன்னிறுத்தி கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது திருச்செந்தூர் சாலை விரிவாக்கப்பணிக்காக கொங்கராயக்குறிச்சி கிராமம் வழியாக சாலை அமைக்க முதற்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. இதனால் இவ்வூரில் உள்ள திரடுகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த திரடானது இவ்வூரின் கீழத்தெருவில் அமைந்துள்ளது. சுமார் 50 அடி உயரம் கொண்ட இந்த திரட்டில் பழமையான திருவாளிப் பெருமாள் மற்றும் சுயம்பு பத்திரகாளி அம்மன் கோவில்கள் உள்ளது. ஒரு காலத்தில் இங்குதான் குடியிருப்புகளை அமைத்து மக்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சாலை பணிக்காக அப்பகுதியில் உள்ள வாய்க்காலின் நீரோட்டத்தை திருப்பி விடுவதற்காக ஜே.சி.பி. எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் புதைந்திருந்த தொல்பொருட்கள் சிதைவடைந்த நிலையில் அந்த இடம் முழுக்க பரவி காணப்படுகிறது. மேலும், குவியல் குவியலாக எலும்புகளும் உள்ளது. இது மனிதனின் கால், முதுகு, முட்டெலும்பு போன்று உள்ளதால், சாலை அமைக்கும் முன்பு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து இப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்