நவம்பர் 4-ம் தேதியில் 'ஹெல்த் வாக் சாலை' திட்டம் : முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
|நவம்பர் 4-ம் தேதியில் 'ஹெல்த் வாக் சாலை' திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் சாலை திட்டம் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேகசாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது, நாங்கள் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த போது அங்கு ஹெல்த் வாக் என்ற சாலை அமைக்கப்பட்டிருந்தது. இது என்ன என்று அவர்களிடம் கேட்ட போது, மக்களிடையே நடைப்பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
மேலும் இந்த சாலைகள் 8 கி.மீ தூரத்திற்கு மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்ட போது, 8 கி.மீ என்பது 10 ஆயிரம் அடிகள் ஆகும். ஒருவர் தினமும் 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே 8 கி.மீ தூரத்திற்கு அமைத்துள்ளதாக அவர்கள் கூறினார்கள். தமிழ்நாட்டிற்கு திரும்பியதும் இந்த அருமையான திட்டம் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்தேன். உடனடியாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 38 மாவட்டங்களிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சாலைகள் தேர்தெடுக்கப்பட்டு ஹெல்த் வாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் நடப்பட்டுள்ளது. மேலும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் முத்துலட்சுமி ரெட்டி பார்க்-ல் இருந்து பெசன்ட் நகர் பீச் வழியாக அன்னை வேளாங்கன்னி சர்ச் வழியாக மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பார்க் வரை சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 4-ம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கின்றார். அன்று காலை 6 மணிக்கு தொடங்கி வைத்து அவர் நடை பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்.