சுகாதார அலுவலர்கள் 122 பேருக்கு தலா ரூ.1,000 வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
|நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் பாதிக்கப்பட்ட சுகாதார அலுவலர்கள் 122 பேருக்கு வழக்கு செலவுக்காக தலா ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வழங்க சுகாதாரத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்றியவர்களுக்கு முன் தேதியிட்டு சுகாதார ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க கடந்த 2011-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி சுகாதார அலுவலர்கள் தமிழக அரசுக்கு எதிராக கடந்த 2015-ம் ஆண்டு ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், 'ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தியது குறித்து எந்த அறிக்கையும் தமிழக அரசால் தாக்கல் செய்யப்படவில்லை. சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் என யாரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. போதுமான அவகாசம் வழங்கியும் உத்தரவை அமல்படுத்தவில்லை' என தெரிவிக்கப்பட்டது.
தலா ரூ.1,000 வழங்க வேண்டும்
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தகுதியான 132 பேரில் 10 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 122 பேருக்கு உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக 2 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை 2 மாதத்துக்கு தள்ளிவைத்தனர். 2 மாதங்களுக்குள் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், மனுதாரர்கள் 122 பேருக்கும் வழக்கு செலவாக தலா ரூ.1,000 வீதம் 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை 2 வாரங்களில் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டனர்.