< Back
மாநில செய்திகள்
பள்ளியில் புகுந்து தலைமை ஆசிரியை, ஆசிரியருக்கு அடி-உதை; கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது
மாநில செய்திகள்

பள்ளியில் புகுந்து தலைமை ஆசிரியை, ஆசிரியருக்கு அடி-உதை; கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது

தினத்தந்தி
|
22 March 2023 12:26 AM IST

எட்டயபுரம் அருகே பள்ளியில் புகுந்து தலைமை ஆசிரியை, ஆசிரியரை அடித்து உதைத்த கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரத்தில் அரசு உதவிபெறும் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு குருவம்மாள் (வயது 56) என்பவர் தலைமை ஆசிரியையாகவும், பாரத் (40) என்பவர் ஆசிரியராகவும் உள்ளனர். இந்த பள்ளிக்கூடத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம்-செல்வி தம்பதியின் மகன் பிரதீஷ் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

வீட்டுப்பாடம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் பாரத், சிறுவன் பிரதீசுக்கு வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார். ஆனால் வீட்டுப்பாடத்தை வீட்டில் உள்ளவர்கள் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாரத், சிறுவனை சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அன்றைய தினமே பிரதீஷின் தாத்தா முனியசாமி பள்ளிக்கூடத்திற்கு சென்று வாக்குவாதம் செய்தார்.

ஓட, ஓட விரட்டி அடி-உதை

இந்த நிலையில் இதுதொடர்பாக கேட்பதற்காக முனியசாமி, சிவலிங்கம், செல்வி ஆகியோர் நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் பள்ளிக்கூடத்திற்கு சென்றனர். அங்கிருந்த ஆசிரியர் பாரத்திடம், என் குழந்தையை ஏன் அடித்தீர்கள் என்று கூறி தகராறு செய்தனர். பின்னர் அவரையும், அங்கு வந்த தலைமை ஆசிரியை குருவம்மாளையும் அடித்துள்ளனர். தொடர்ந்து அவர்களை ஓட, ஓட விரட்டி செருப்பால் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் பள்ளியில் இருந்த நாற்காலிகளை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றனர்.

பெற்றோர்கள் போராட்டம்

இதுபற்றி தகவல் அறிந்த அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் எட்டயபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

3 பேர் கைது

பின்னர் இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியை குருவம்மாள் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, முனியசாமி, சிவலிங்கம், செல்வி ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே பள்ளிக்கூடத்தில் புகுந்து தலைமை ஆசிரியை, ஆசிரியரை தாக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்