செங்கல்பட்டு
கல்பாக்கம் கடற்கரையில் தலைமை ஆசிரியர் பிணமாக மீட்பு: எனது மகனை கொன்று கடலில் வீசிவிட்டனர்; போலீஸ் சூப்பிரண்டிடம் தாய் புகார் மனு
|கல்பாக்கம் கடற்கரையில் தலைமை ஆசிரியர் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில், எனது மகனை கொன்று கடலில் வீசி விட்டனர் என்று அவரது தாய் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளார்.
பிணமாக கிடந்தார்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வசித்து வந்தவர் பழனியப்பன் (வயது 52). இவர், கூவத்தூர் அடுத்த கீழார்கொள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மங்கையர்க்கரசி. இவரும் அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக உள்ளார். கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பழனியப்பன், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையில் கல்பாக்கம் கடற்கரையில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் பழனியப்பன் இறந்து கிடந்தார். இதுபற்றி கல்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாய் புகார்
இந்தநிலையில் பழனியப்பனின் தாயார் கண்ணாமணி (70), தனது மகன் சாவில் மர்மம் உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பழனியப்பன் எப்படி கல்பாக்கம் கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் வீட்டில் நகை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் ஒருவர் அடியாட்களை வைத்து என் மகனை கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு எங்கள் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. என்னுடைய மகன் மர்ம மரண வழக்கில் தனிப்படை அமைத்து விசாரித்தால்தான் அவனது சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இது ெதாடர்பாக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பப்பட்டது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன் மர்ம மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பி்ரண்டு அலுவலகத்துக்கு குற்றம் சாட்டப்பட்ட துப்புரவு பெண் பணியாளர், அவருடைய மகன், மருமகன் மற்றும் பழனியப்பன் குடும்பத்தினர் என அனைவரையும் வரவழைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் முதல்கட்ட விசாரணை நடத்தினார்.
பழனியப்பன் இறந்த ஜூலை 5-ந்தேதி அவரை ஆட்டோவில் அழைத்து சென்ற ஆட்டோ டிரைவா் இந்த விசாரணைக்கு வராததால் அவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இறந்து 2 மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் உண்மை தன்மை குறித்து விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டிருப்பது கூவத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.