ஈரோடு
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பள்ளிக்கூட மாணவிகள் தூய்மை உறுதிமொழி ஏற்பு
|கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பள்ளிக்கூட மாணவிகள் தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' என்ற தலைப்பில் பள்ளிக்கூட வளாகங்கள் தூய்மை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித்துறையின் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் இதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. வட்டார, பள்ளிக்கூட அளவிலான குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த திட்ட தொடக்க நிகழ்ச்சி ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் பள்ளிக்கூடத்தில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி பள்ளிக்கூட தூய்மை குறித்த உறுதிமொழியை வாசிக்க மாணவிகள் திரும்ப கூறி உறுதிமொழி ஏற்றனர். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயங்கள், பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குழந்தைராஜன், தொடக்கக்கல்வி அதிகாரி ஜோதிசந்திரா, உதவி திட்ட அதிகாரி ராதாகிருஷ்ணன், தலைமை ஆசிரியை மாலா உள்பட பலர் கலந்துகொண்டனா்.