மதுரை
உப்புச்சத்து பாதிப்பால் இறக்க நேரிடும் என்ற இணையதள தகவலால் தற்கொலை செய்த என்ஜினீயர்
|உப்புச்சத்து பாதிப்பால் இறக்க நேரிடும் என்ற இணையதள தகவலால் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பரங்குன்றம்,
உப்புச்சத்து பாதிப்பால் இறக்க நேரிடும் என்ற இணையதள தகவலால் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார்.
என்ஜினீயர்
மதுரை பசுமலை அன்னை மீனாட்சி நகர் கோல்டன் சிட்டி 5-வது தெருவை சேர்ந்தவர் கனகராஜ். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவருடைய மகன் விஜயகுமார் (வயது30). என்ஜினீயர். வெளிநாட்டு நாய்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் விஜயகுமாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. கடந்த 30-ந் தேதியன்று மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது, உடலில் உப்பின் அளவு அதிகமாக உள்ளது என்று டாக்டர் கூறியதாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்த நிலையில், விஜயகுமார் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கி உள்ளார்.
இதை அவருடைய பெற்றோர் பார்த்து, விஜயகுமாரை மீட்டு, சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு விஜயகுமாரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
காரணம் என்ன?
விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறும்போது, "தனது பெற்றோரிடம், தனக்கு உப்புச்சத்து அதிகமாக உள்ளது என்று டாக்டர் தெரிவித்ததாக விஜயகுமார் கூறியுள்ளார். இந்த நிலையில் உப்புச்சத்து அதிகமானால் என்னென்ன பாதிப்பு ஏற்படும்? என்று இணையதளத்தில் தேடினாராம். ஆனால், அந்த தேடலே அவரின் உயிருக்கு ஆபத்தாக அமைந்துள்ளது. அதாவது, உடலில் உப்புச்சத்து அதிகமானால் இறப்பு நேரிடும் என்று இணையதள தகவலில் கூறப்பட்டு இருந்ததாகவும், அதனால் மனவருத்தம் அடைந்த அவர், நோய் பாதிப்பால் இறந்துவிடுவோம் என நினைத்து தற்கொலை செய்துள்ளார். ஆனால், இதுபோன்ற தேடல்களால் மன ரீதியாக பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே உடல்நலக்குறைவு ஏற்பட்டால் டாக்டரிடம் ஆலோசித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும், என தெரிவித்தனர்.