திருநெல்வேலி
விபத்தில் பலியான மெக்கானிக் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
|ஆலங்குளம் அருகே நடந்த விபத்தில் மெக்கானிக் பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து நெல்லையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை ஜோதிபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். மாவட்ட காங்கிரஸ் செயலாளராக உள்ளார். இவருடைய மகன் அருண் பிரகாஷ் (வயது 21). டிப்ளமோ என்ஜினீயரான இவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் கார் விற்பனை நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் ஊத்துமலை சேர்ந்தமரம் அருகே பழுதாகிய காரை பழுது நீக்குவதற்காக, அருண்பிரகாஷ் பணிபுரியும் தனியார் நிறுவனத்தின் சார்பில் அவரை அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சென்று காரை பழுது செய்த பின்னர் மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
ஆலங்குளம் அருகே நல்லூர் விலக்கு பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதிக்கொண்டன. இதில் அருண் பிரகாஷ் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அருண் பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அருண் பிரகாஷ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நேற்று காலையில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள ஜோதிபுரம் திடலில் திரண்டனர். அவர்களுக்கு ஆதரவாக நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில செய்தி தொடர்பாளர் சண்முகசுதாகர், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்பபாண்டியன், வக்கீல் செல்வம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
உடனே அங்கு வந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா, உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர்கள் வாசிவம், ஹரிகரன் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ''விபத்தில் காயம் அடைந்த அருண் பிரகாசுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் வேலை செய்த தனியார் நிறுவனத்தினர் தெரிவித்து இருந்தனர். ஆனால் அவர் இறந்த பிறகு கண்டுகொள்ளவில்லை. தனியார் நிறுவனத்தினரின் உத்தரவுபடி சென்றபோதுதான் அருண்பிரகாஷ் விபத்தில் சிக்கி இறந்ததால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அருண் பிரகாஷின் உறவினர்கள் உள்ளிட்டவர்கள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர்.