கன்னியாகுமரி
கருங்கல் அருகே நள்ளிரவில் பயங்கரம்: பாட்டியை அடித்து கொன்றஎன்ஜினீயர் கைது
|கருங்கல் அருகே பாட்டியை அடித்துக் கொன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல்:
கருங்கல் அருகே பாட்டியை அடித்துக் கொன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியாக வசித்த மூதாட்டி
கருங்கல் அருகே உள்ள மங்கலக்குன்று பாலவிளையை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி தங்கப்பழம் (வயது 77). இவர்களுக்கு 4 மகள்கள் உண்டு. அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். தர்மராஜ் இறந்த நிலையில் தங்கப்பழம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இவருடைய மூத்த மகள் தங்கம் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஷாஜின் (33), என்ஜினீயரிங் பட்டதாரி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு தங்கப்பழத்தின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர்.
பிணமாக கிடந்தார்
அப்போது, தங்கப்பழம் முகம் சிதைந்த நிலையில் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ெதாடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தங்கப்பழக்கத்தை அவரது பேரன் ஷாஜின் அடித்து கொன்றது தெரிய வந்தது. அதன் விவரம் வருமாறு:-
என்ஜினீயரான ஷாஜின் மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்தார். மேலும் அடிக்கடி தாய் தங்கத்துடன் சண்டை போட்டு அவரை அடித்து உதைப்பது வழக்கம். இதனால் பாதுகாப்பு கருதி தாயார் தங்கம் தனது தாயாரான தங்கப்பழத்தின் வீட்டில் அடைக்கலம் புகுவது வழக்கம்.
தாயை தேடி வந்தார்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த ஷாஜின் தாயை தேடினார். அப்போது தாயார் தங்கம் பக்கத்து வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்தார். இதை அறியாத ஷாஜின் தனது தாயை தேடி பாட்டி தங்கப்பழத்தின் வீட்டை நோக்கி சென்றார்.
அங்கு சென்று தனது தாய் எங்கே? என கேட்டு பாட்டியிடம் தகராறு செய்தார். அப்போது தங்கப்பழம் 'இங்கு யாரும் வரவில்லை' எனக்கூறி ஷாஜினை அங்கிருந்து வெளியேற்ற முயன்றார்.
நாற்காலியால் தாக்கினார்
இதில் ஆத்திரமடைந்த ஷாஜின் அருகில் இருந்த மர நற்காலியால் பாட்டியை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததை அறியாத ஷாஜின் அங்கிருந்து வெளியேறி அருகே இருந்த பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்தார். அங்கிருந்த பொருட்களை தூக்கி தாறுமாறாக வீசினார். தொடர்ந்து அங்கு இருந்த ஒரு பழைய டி.வி.யின் உபகரணத்தை எடுத்து கொண்டு மீண்டும் பாட்டியின் வீட்டுக்கு சென்று இறந்து கிடந்த தங்கப்பழத்தை சரமாரியாக தாக்கினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்றார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து தங்கப்பழத்தின் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பேரன் கைது
இதற்கிடைேய ஷாஜின் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, போலீசார் அங்கு சென்று ஷாஜினை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாட்டியை பேரன் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.