< Back
மாநில செய்திகள்
லஞ்சம் கொடுத்த பணத்தை வட்டியுடன் திரும்ப கேட்ட  நில அளவை துறை முன்னாள் ஊழியர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்-மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
அரியலூர்
மாநில செய்திகள்

லஞ்சம் கொடுத்த பணத்தை வட்டியுடன் திரும்ப கேட்ட நில அளவை துறை முன்னாள் ஊழியர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்-மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

தினத்தந்தி
|
11 Aug 2022 6:57 PM GMT

தனி பட்டா வழங்க லஞ்சம் கொடுத்த பணத்தை வட்டியுடன் திரும்ப கேட்டு வழக்கு தாக்கல் செய்த நில அளவை துறையின் முன்னாள் ஊழியர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

தனி பட்டா

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் நில அளவை துறையின் முன்னாள் ஊழியர் நடராஜன் தனது நிலங்களை அளந்து தனி பட்டா வழங்காத அரியலூர் தாசில்தார், நில அளவையர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீது அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

தனி பட்டா வழங்க நில அளவையர் கேட்ட பணத்தில் ரூ.3,800 முன்பணம் லஞ்சமாகவும், கிராம நிர்வாக அலுவலர் கேட்ட பணத்தில் ரூ.15 ஆயிரம் முன்பணம் லஞ்சமாக கொடுத்ததாகவும், ஆனால் அவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு பட்டா வழங்கவில்லை என்பதால் அவர்கள் வாங்கிய பணத்தை வாங்கிய நாளிலிருந்து வட்டியுடன் திருப்பி வழங்க உத்தரவிடுமாறும் தமது வழக்கில் கூறியிருந்தார்.

சட்டப்படி குற்றம்

இந்த வழக்கை விசாரித்து ஆவணங்களை பரிசீலித்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், அரசு ஊழியர் சட்டப்படி செய்ய வேண்டிய பணியை செய்வதற்கு லஞ்சம் பெறுவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்ற நிலையில் லஞ்சம் கொடுப்பது குற்றம் என்ற சட்டம் தமக்கு தெரியாது என்று கூறி யாரும் தப்பித்துக் கொள்வதை அனுமதிக்க இயலாது.

தான் லஞ்சமாக கொடுத்த பணத்தை கொடுத்த நாளிலிருந்து வட்டியுடன் திருப்பி செலுத்த லஞ்சம் பெற்றதாக கூறப்படும் நபர்களுக்கு ஆணையிடும்படி கூறுவதை கடந்து சென்றுவிட முடியாது. சட்டவிரோதமான செய்கை இந்த ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ள நிலையில் இதனை சம்பந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது ஆணையத்தின் கடமையாகும். இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இன்ஸ்பெக்டர் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இழப்பீடு

இந்த வழக்கை தாக்கல் செய்த நடராஜன் தனி பட்டா வழங்கக்கோரி அரியலூர் தாசில்தாரிடம் தாக்கல் செய்த மனு மீது 4 வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும். தவறினால் வழக்கை தாக்கல் செய்தவருக்கு தாசில்தார், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற விசித்திரமான வழக்கு ஒன்றை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்த மாதம் வழக்கை தள்ளுபடி செய்து வழக்கை தாக்கல் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்