மதுரை
மதுரையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரி போன்று நடித்தவர், லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டரிடமே சிக்கினார்
|மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தவர், லஞ்ச ஒழிப்பு பெண் இன்ஸ்பெக்டரிடம் சிக்கினார்.
மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தவர், லஞ்ச ஒழிப்பு பெண் இன்ஸ்பெக்டரிடம் சிக்கினார்.
புகார்
மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (லஞ்ச ஒழிப்பு பிரிவு) இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சூரியகலா. இவர் தல்லாகுளம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
நான் பணியில் இருந்தபோது சென்னை பழவந்தாங்கல் நேரு காலனி 6-வது தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 45) என்னை போனில் தொடர்பு கொண்டு, நானும் சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாக பேசினார்.
மேலும் மதுரை ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் வேலை தொடர்பாக வந்துள்ளதால் உங்களை நேரில் பார்க்க வருகிறேன் என்று தெரிவித்தார். அலுவல் தொடர்பாக பார்க்க வருவதாக கூறியதால் நான் சரி என்று தெரிவித்தேன். அலுவலகத்திற்கு வந்த அவரிடம் பேச்சு கொடுப்பது போல் விசாரணை மேற்கொண்டேன். அப்போது எந்த 'பேட்ஜை' சேர்ந்தவர், எங்கே வசிக்கிறீர்கள்,, மதுரைக்கு எதற்காக வந்தீர்கள்? என்பது பற்றி கேட்டேன்.
பதவி உயர்வு வேண்டாம்...
அதற்கு முத்துக்கிருஷ்ணன், தனது சொந்த ஊர் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பாறைப்பட்டி என்றும், சென்னையில் தற்போது வசித்து வருவதாக தெரிவித்தார். மேலும் 1996-ம் ஆண்டு பணியில் சேர்ந்ததாகவும், சென்னை மவுண்ட்டில் தன்னுடன் 1000 பேர் பயிற்சி பெற்றதாகவும் தெரிவித்தார். உடனே உங்களுடன் சேர்ந்தவர்கள் எல்லாம் துணை சூப்பிரண்டு ஆகி விட்டார்கள், நீங்கள் ஏன் ஆகவில்லை? என்று கேட்டேன் அதற்கு முத்துகிருஷ்ணன் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக பதவி உயர்வு வேண்டாம் என்று எழுதி கொடுத்ததாக கூறினார்.
மேலும் தற்போது சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பதாகவும், மேலும் சில அதிகாரிகள் பற்றியும் கூறினார். அவர் தெரிவித்த தகவல் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் சந்தேகம் அடைந்தேன். பின்னர் அவரிடம் உண்மையை கூறுமாறு கேட்ட போது அவர் பயந்து உண்மையை தெரிவித்தார்.
கிராம நிர்வாக அதிகாரிக்காக வந்தேன்
அப்போது அவர் சென்னையில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பொருட்கள் ஸ்கேனர் பிரிவில் பணியாற்றி வருவதாக கூறினார். தன்னுடைய உறவினர் ஒருவருக்கு வருவாய் சான்றிதழ் வாங்க பேரையூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அதிகாரி முத்துக்காளையுடன் பழக்கம் ஏற்பட்டது.
லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் என்று அவரிடம் கூறினேன். தன் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் ஒன்று உள்ளது என முத்துக்காளை கூறி, அதனை சிபாரிசு செய்து, சரிசெய்து தருமாறு கூறினார். எனக்கு ரெயிலில் டிக்கெட் எல்லாம் எடுத்து கொடுத்தார். அவருக்காக மதுரை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் வந்து பேசும் போதுதான், சிக்கிக்கொண்டதாக கூறினார்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.
கைது
இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் இவர் இது போன்று வேறு எங்காவது லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி கைவரிசை காட்டி உள்ளாரா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நடவடிக்கை மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.