< Back
மாநில செய்திகள்
ஆட்கொணர்வு மனு; செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு; 3-வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை
மாநில செய்திகள்

ஆட்கொணர்வு மனு; செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு; 3-வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை

தினத்தந்தி
|
5 July 2023 5:34 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில், 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனையடுத்து 3-வது நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது வேலை வாங்கி தருவதாக கூறி சிலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

சட்டவிரோதம்

இந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் 14-ந் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அப்போது, செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், தன் கணவர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக பிடித்து சென்றுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில், ஆட்கொணர்வு மனுவை கடந்த ஜூன் 14-ந் தேதி தாக்கல் செய்தார்.

அறுவை சிகிச்சை

அதில், 'செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், இருதய அறுவை சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்' என்றும் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அமலாக்கத்துறை சிறப்பு வக்கீல் என்.ரமேஷ், மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து, செந்தில் பாலாஜி ஏற்கனவே காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால், அதே ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சையை சொந்த செலவில் மேற்கொள்ளலாம் என்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். இதன்படி, செந்தில் பாலாஜிக்கு அந்த ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நடந்தது.

இருதரப்பு வாதங்கள்

இதன் பின்னர் இந்த ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது, அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மனுதாரர் தரப்பில் முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 27-ந் தேதி உத்தரவு பிறப்பித்தனர்.

2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று காலையில் பிறப்பித்தனர். இதில், நீதிபதி ஜெ.நிஷா பானு சென்னை ஐகோர்ட்டிலும், நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஐகோர்ட்டு மதுரை கிளையிலும் உள்ளனர். அதனால், இந்த வழக்கின் தீர்ப்பை காணொலி காட்சி வாயிலாக நீதிபதிகள் வழங்கினர். அப்போது, 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

உடனடியாக விடுதலை

அதில், நீதிபதி ஜெ.நிஷா பானு முதலில் தீர்ப்பை வாசித்தார். அவர் தனது தீர்ப்பில், 'இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது. சட்டவிரோத பண பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. ஆஸ்பத்திரியில் செந்தில் பாலாஜி உள்ள காலத்தை கோர்ட்டு காவலில் இருப்பதாக கருதக்கூடாது என்ற அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரிக்கிறேன். செந்தில் பாலாஜியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்' என்று கூறினார்.

சிறையில்தான் சிகிச்சை

இதையடுத்து நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி தன் தீர்ப்பை வாசித்தார். அவர் கூறியதாவது:-

நீதிபதி ஜெ.நிஷா பானு தீர்ப்பை ஏற்கவில்லை. அதனால், மாறுபட்ட தீர்ப்பை வழங்குகிறேன். இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. அதனால், தள்ளுபடி செய்கிறேன். ஜூன் 14-ந் தேதி முதல் காவலில் எடுத்து விசாரிக்க செந்தில் பாலாஜி உடல் தகுதி பெறும் வரையிலான காலக்கட்டத்தை கோர்ட்டு காவலில் இருந்ததாக கருதக்கூடாது என்ற அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்கிறேன். இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட செந்தில் பாலாஜி, டாக்டர்கள் பரிந்துரைக்கும் வரை அல்லது அதிகபட்சம் இன்றில் (நேற்றில்) இருந்து 10 நாட்களுக்கு சிகிச்சை பெறலாம். அதன் பின்னரும் சிகிச்சை தேவைப்பட்டால், அவர் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும்.

நிராகரிக்கக்கூடாது

உடல் நலம் சரியான பின்னர், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்யலாம். இவ்வாறு மனு தாக்கல் செய்யும்போது, முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி சட்டப்படி அதை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யவில்லை என்று காரணம் கூறி நிராகரிக்கக்கூடாது. இந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

3-வது நீதிபதிக்கு பரிந்துரை

நீதிபதிகள் 2 பேரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால், இந்த வழக்கை 3-வது நீதிபதி விசாரணைக்கு அனுப்ப தலைமை நீதிபதிக்கு இருவரும் பரிந்துரை செய்தனர்.

இதன்படி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியை தலைமை நீதிபதி விரைவில் நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்