ஏராளமான முரண்பாடுகள்.. கோவை கோர்ட்டில் ஆயுள் தண்டனை பெற்றவரை விடுதலை செய்தது ஐகோர்ட்டு
|கொலை வழக்கை விசாரித்த கோவை மாவட்ட செசன்சு கோர்ட்டு, வேடியப்பனுக்கு ஆயுள் தண்டனை விதித்து 2019-ம் ஆண்டு தீர்ப்பு அளித்திருந்தது.
சென்னை:
கோவை மாவட்டம், குனியமுத்தூரைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவர் ஒரு பெண்ணை கொலை செய்ய முயன்றதாக குனியமுத்தூர் போலீசார் 2012-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருந்தனர். வேடியப்பனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர், கணவனிடம் விவாகரத்து பெற்ற மயில் என்ற இன்னொரு பெண்ணுடன் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு மே 18-ந்தேதி காலையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், மயில் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் மயிலை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அவருக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது'' என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கில் தீக்காயம் அடைந்த பெண்ணிடம் கோவை மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார். சிகிச்சைக்கு பின்னர் 25-ந்தேதி அந்த பெண் வீடு திரும்பினார்.
அதன்பின்னர், கொலை முயிற்சி குற்றச்சாட்டின் கீழ் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு சம்மனை எடுத்துக்கொண்டு போலீசார் சென்றபோதுதான் மயில் 2012-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி மரணம் அடைந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கோர்ட்டு அனுமதியுடன் மீண்டும் புலன் விசாரணை நடத்தி, வேடியப்பன் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட செசன்சு கோர்ட்டு, ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வேடியப்பன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
இறந்துபோன பெண் அளித்த வாக்குமூலத்தில் வேடியப்பன் தன் மீது தீ வைத்து விட்டு ஓடி விட்டார். காப்பாற்றக் கூட முயற்சிக்கவில்லை. மீன்காரர் உள்ளிட்டோர்தான் தன்னை ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக, கூறியுள்ளார்.
ஆனால், விபத்து ஆவணத்தில், சமையல் செய்யும்போது தீ பிடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவரை காப்பாற்றிய மீன்காரர் முதலில், வேடியப்பன் தீ வைத்து விட்டு ஓடி விட்டார் என்று கூறியுள்ளார். ஆனால், குறுக்கு விசாரணையில், சம்பவம் நடந்தபோது கூடியிருந்தவர்கள் அப்படி பேசிக்கொண்டதால், அதன் அடிப்படையில் அவ்வாறு கூறியதாக கூறியுள்ளார். அந்த பெண் இறந்ததை போலீசில் சொன்னதாக அவரது சகோதரர் கூறியுள்ளார். ஆனால், அவ்வாறு தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஒருவேளை தீ காயத்தினால் அந்த பெண் இறந்து இருந்தாலும், அந்த உடலை அன்றே எரிக்காமல், பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் அப்படி எதுவும் நடக்கவில்லை. முதலில் 25 முதல் 30 சதவீத தீக்காயம் என்று டாக்டர் சான்றிதழில் இருந்தது. இறந்ததாக கூறிய பின்னர் 55 சதவீதம் என்று சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல சிகிச்சை அளித்த டாக்டர் பெயர் எதுவும் இல்லை. படுகாயம் அடைந்த பெண் இறந்ததுகூட முதலில் போலீசாருக்கு தெரியவில்லை.
இந்த வழக்கில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதால், இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள சாட்சிகளின் அடிப்படையில் மனுதாரருக்கு தண்டனை வழங்க முடியாது, அதனால், வேடியப்பனுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்கிறோம். அவரை விடுதலை செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.