< Back
மாநில செய்திகள்
மின்கம்பத்தின் மீது வைக்கோல் ஏற்றிய சரக்கு ஆட்டோ மோதல்
அரியலூர்
மாநில செய்திகள்

மின்கம்பத்தின் மீது வைக்கோல் ஏற்றிய சரக்கு ஆட்டோ மோதல்

தினத்தந்தி
|
21 Feb 2023 12:35 AM IST

மின்கம்பத்தின் மீது வைக்கோல் ஏற்றிய சரக்கு ஆட்டோ மோதியது.

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் கடைவீதி பகுதியில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வைக்கோல் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ, தபால் நிலையம் அருகில் இருந்த மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து சரக்கு ஆட்டோவின் பக்கவாட்டில் சரிந்தது. மின் கம்பிகள் அறுந்து சாலையின் குறுக்கே விழுந்தன. மின் கம்பிகள் சரக்கு ஆட்டோவின் மீது விழாததால், சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் செந்துறை அருகே உள்ள மத்துமடக்கி பகுதியை சேர்ந்த பழனிசாமி, அந்த சரக்கு ஆட்டோவில் பயணித்த அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் மின்கம்பம் உடைந்து விழுந்ததால் அருகில் உள்ள வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பலத்த சத்தம் கேட்டு வீடுகளில் இருந்து வெளியில் வந்த அப்பகுதி மக்கள், உடனடியாக மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். வழக்கமாக அதிகாலை நேரத்தில் அதிக அளவில் சரக்கு வாகனங்கள் இந்த சாலை வழியாக இயக்கப்படுவது வழக்கம். கும்பகோணம் - சென்னை இடையே செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களும் இந்த சாலையிலேயே சென்று வருகின்றன. இதனால் நேற்று இந்த சம்பவம் நடைபெற்றவுடன் உஷார் அடைந்த அப்பகுதி மக்கள், அப்பகுதி வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். சிறிது நேரத்தில் சாலையின் குறுக்கே நின்ற சரக்கு ஆட்டோவை, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான தா.பழூர் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் டிரைவர் பழனிசாமி தூங்கியதே, இந்த விபத்துக்கு காரணம் என்று தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மின்வாரிய உதவி பொறியாளர் இளையராஜா தலைமையிலான மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, மின்கம்பம் உடைந்த இடத்தில் மீண்டும் புதிய மின் கம்பத்தை நட்டு மாலைக்குள் அப்பகுதியில் மின் வினியோகத்தை சீர் செய்தனர். துரிதமாக செயல்பட்டு பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்