< Back
மாநில செய்திகள்
கடலூரில் பஸ்சில் வந்த தொழிலாளியிடம் ரூ.26 லட்சம் பறிமுதல் ஹவாலா பணமா? வருமான வரித்துறையினர் விசாரணை
கடலூர்
மாநில செய்திகள்

கடலூரில் பஸ்சில் வந்த தொழிலாளியிடம் ரூ.26 லட்சம் பறிமுதல் ஹவாலா பணமா? வருமான வரித்துறையினர் விசாரணை

தினத்தந்தி
|
26 Feb 2023 12:15 AM IST

கடலூரில் பஸ்சில் வந்த தொழிலாளியிடம் ரூ.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் ஹவாலா பணமா? என வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூர் புதுநகர் போலீசார் நேற்று மதியம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பஸ்சை மறித்தனர். பின்னர் அந்த பஸ்சில் ஏறி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் கையில் பேக்குடன் அமர்ந்திருந்தார்.

இதை பார்த்த போலீசார், அந்த நபர் வைத்திருந்த பேக்கை வாங்கி சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பணத்திற்கு எந்த ஒரு ஆவணமும் இல்லை. இதனால் பணம் இருந்த பேக்குடன், அந்த நபரை புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த பீர் முகமது (வயது 42) என்பதும், அந்த பேக்கில் ரூ.26 லட்சம் இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், சென்னை மண்ணடியில் ஓட்டல் நடத்தி வரும் சாதிக் என்பவர் மூலம் பணத்தை கடலூருக்கு எடுத்து வந்து கடலூர் எஸ்.என்.சாவடியில் வசித்து வரும் ஒரு பெண்ணிடம் கொடுக்க வந்ததும் தெரியவந்தது. இருப்பினும் அது ஹவாலா பணமா என்பது பற்றி தெரியவில்லை.

இதையடுத்து கடலூர் புதுநகர் போலீசார், இதுதொடர்பாக சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மாலை கடலூர் புறப்பட்டனர். பின்னர் அவர்கள் வந்ததும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.26 லட்சம் மற்றும் பிடிபட்ட பீர் முகமதுவை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பீர்முகமதுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகே பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா?, இல்லையா? என்பது பற்றிய விவரம் தெரிய வரும். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்