< Back
மாநில செய்திகள்
உரிய ஆவணங்கள் இல்லாமல் பஸ்சில் கொண்டு சென்ற ரூ.15 லட்சம் பறிமுதல் ஹவாலா பணமா?
மாநில செய்திகள்

உரிய ஆவணங்கள் இல்லாமல் பஸ்சில் கொண்டு சென்ற ரூ.15 லட்சம் பறிமுதல் ஹவாலா பணமா?

தினத்தந்தி
|
20 Dec 2022 8:41 PM GMT

உரிய ஆவணங்கள் இல்லாமல் பஸ்சில் கொண்டு சென்ற ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப்பணம் ஹவாலா பணமா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் அதிகாலை 4 மணிக்கு திடீரென்று பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் கேரள அரசு பஸ்சில் ஏறி, பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது ஒருவர் வைத்திருந்த பையில் கட்டு, கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து பையில் இருந்த ரூ.15 லட்சம் மற்றும் பிடிபட்ட நபரை பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பு

விசாரணையில் அவர் புதுக்கோட்டையை சேர்ந்த முகமது அப்துல்லா (வயது 52) என்பதும், புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் பண பரிமாற்ற நிறுவனத்தை சேர்ந்த பஷீர் என்பவர் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது. மேலும் கேரளா மாநிலம் திரூர் பஸ் நிலையத்தில் பைசல் என்பவரிடம் பணத்தை கொடுக்க சென்றதாக போலீசாரிடம் முகமது அப்துல்லா தெரிவித்தார். இதேபோன்று கடந்த மாதம் பஷீர் கொடுத்து அனுப்பியதாக ரூ.10 லட்சத்தை பைசலிடம் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

ஆனால் அந்த பணம் எதற்காக கொடுத்து அனுப்பப்பட்டது என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.15 லட்சம் மற்றும் முகமது அப்துல்லாவை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வருமான வரி செலுத்தாமல் இருப்பதற்காக பணத்தை கேரளாவுக்கு பஸ்சில் கடத்தி சென்றாரா? அல்லது ஹவாலா பணமா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்