சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரங்களை விசாரிக்க அதிகாரம் உண்டு - இந்து சமய அறநிலையத்துறை
|சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரங்களை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் உண்டு என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
சிதம்பரம் நடராஜர் கோவில் வரவு-செலவு கணக்கு உள்ளிட்ட விவகாரங்களை விசாரிக்க குழு நியமிக்க தங்களுக்கு அதிகாரம் உண்டு என இந்து சமய அறநிலையத்துறை இன்று விளக்கம் அளித்துள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க நடராஜர் கோவில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையால் உருவாக்கப்பட்ட அதிகாரிகள் குழு ஒன்று வரும் 7, 8-ந்தேதிகளில் ஆய்வு செய்ய உள்ளதாக கடந்த மாதம் 26-ம் தேதி தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், இந்து சமய அறநிலையத்துறை குழுவின் ஆய்வுக்கு ஆட்சேபம் தெரிவித்தும் தீர்ட்சிதர்கள் சார்பில் அறநிலையத்துறைக்கு கடிதம் அனுப்பட்டது.
அந்த கடிதத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களால் நிர்வகிக்கப்படுவதால் இந்த கோவில் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீட்சிதர்களின் கடிதத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பல்வேறு தீர்ப்புகளில் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது கோவில் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடராஜர் கோவில் நிர்வாகத்தை சீரமைக்க வரவு-செலவு கணக்கு உள்ளிட்ட கோவில் அலுவல் பணிகளை விசாரிக்க குழு இந்து சமய அறைநிலையத்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது.
கொரோனா தொற்றுக்கு முன்பு கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக அது தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த தடை உள்பட அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, நடராஜர் கோவில் கனகசபை மீது பக்தர்கள் ஏற விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை அரசு எந்த வகையிலும் தலையிடுவதில்லை. அதேவேளை இந்த கோவில் பொதுக்கோவில் என்பதால் கோவில் வரவு-செலவு கணக்கு உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்க அறநிலையத்துறைக்கு அதிகாரம் உண்டு. ஆகையால், வரும் 7, 8-ம் தேதிகளில் கோவிலுக்கு ஆய்வுக்குழுவை அனுப்புவதற்கான நடவடிக்கையை திரும்பப்பெறுவதற்கான வழி இல்லை. ஆகையால், ஆய்வுப்பணிகளை முடிக்க அதிகாரிகள் குழுவுக்கு தீட்சிதர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான முழு விவரம்:-
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்கிறது. இதற்காக வரவு-செலவு கணக்குகளை தயார் நிலையில் வைக்க தீட்சிதர்களுக்கு கடந்த 29-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
நோட்டீஸ்
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்தனர். பின்னர் அரசு உத்தரவின்பேரில் அந்ததடை நீக்கப்பட்டு, தற்போது கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த கோவிலை சட்ட விதிகளின் படி தீட்சிதர்கள் நிர்வாகம் செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கடலூர் துணை ஆணையர் ஜோதியை நியமித்துள்ளது. அவர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளருக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
குழு ஆய்வு
நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், மேற்கண்ட கோவில் சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா? என்பது குறித்தும், கோவிலை நேரடியாக ஆய்வு செய்து திருக்கோவில் நிர்வாகத்தை சீரமைப்பது குறித்தும் உரிய பரிந்துரைகள் வழங்கிட இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959-ல் உள்ள சட்டப்பிரிவு 23 மற்றும் 33-ன் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தின்படி ஒரு குழுவை அமைத்து அதன் ஒருங்கிணைப்பாளராக என்னை அரசு நியமனம் செய்துள்ளது.
இந்த உத்தரவின்படி நடராஜர் கோவிலை குழு உறுப்பினர்கள் வருகிற 7, 8-ந்தேதிகளில் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர். மேற்கண்ட ஆய்வுக்காக போதிய ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வரவு-செலவு கணக்குகள்
அதாவது 2014-ம் ஆண்டு முதல் வரவு-செலவு கணக்குகள், திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றிற்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்கள், திருக்கோவிலுக்குச் சொந்தமான கட்டளைகள், கட்டளைகளுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் அவற்றில் இருந்து பெறப்படும் வருவாய் இனங்கள், சொத்துகளின் தற்போதைய நிலை, இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட சொத்துப்பதிவேடு, மரப்பதிவேடு, திட்டப்பதிவேடு மற்றும் காணிக்கை பதிவேடுகள், திருக்கோவிலுக்கு சொந்தமான நகைகள் மற்றும் விலை உயர்ந்தவைகள் மதிப்பீட்டறிக்கை, கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் குத்தகைதாரர்கள் விவரம், கேட்பு வசூல் நிலுவை பதிவேடுகள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஒத்துழைப்பு வழங்க...
2 நாட்கள் ஆய்வு செய்ய வரும் குழுவிற்கு நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.