< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

"2026ல் ஒரு பிளான் இருக்கு" விஜயகாந்தை நேரில் சந்தித்து விட்டு அன்புமணி பேட்டி

தினத்தந்தி
|
1 Jun 2022 5:58 PM IST

"2026ல் ஒரு பிளான் இருக்கு" விஜயகாந்தை நேரில் சந்தித்து விட்டு அன்புமணி கூறியுள்ளார்.

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்து வந்த அன்புமணி ராமதாஸ் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றக் கொண்ட அன்புமணி, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் இன்று விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவரை சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர்மீது எப்போதும் எனக்கு தனிப்பட்ட மரியாதை இருக்கிறது.

அவரது மகன் விஜய பிரபாகரன் மூலம், பாமக நிறுவனர் ராமதாசின் உடல்நலம் குறித்து விசாரித்தார். 2026-இல் தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும். அதில் எங்கள் கட்சியின் இலக்கு பாமக ஆட்சிக்கு வர வேண்டும். அது தனிப்பட்ட ஆட்சியாக இருக்காது; கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியாகத்தான் இருக்கும். பாமகவைப் போல ஒருமித்த கருத்துள்ள கட்சிகளை நாங்கள் அணுகுவோம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, பாமக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்புமணி ராமதாஸ், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ஓபிஎஸ், இபிஎஸ், கவர்னர் ஆர்.என்.ரவி மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்