வெறுப்பு அரசியலை வேரோடு வெட்டி வீழ்த்த வேண்டும் - வைகோ ஆவேசம்...!
|வெறுப்பு அரசியலை வேரோடு வெட்டி வீழ்த்தவேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்து உள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முகமது நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. தேசிய செய்தித்தொடர்பாளர் நுபூர் சர்மாவின் விமர்சனத்தை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்ணையா லால் டெலி, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து இருந்தார்.
கடந்த ஜூன் 28-ந் தேதி கடையை திறந்து பணி செய்துகொண்டிருந்த கன்னையா லாலை இழுத்து தெருவில் போட்டு, அவரது தலையை துண்டித்து கொலை செய்த 2 பேர், அந்த கொடூரச் செயலை ஒளிப்பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவாக்கி பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.
துடி, துடிக்க தலையை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய முகமது ரியாஸ் அக்தரி, கவுஸ் முகமது ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் செய்வதைப்போல உதய்பூரில் கன்னையா லால் தலையை வெட்டி, அதை பகிரங்கமாக சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கும் கொடூரம் கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை ஒருபோதும் இந்த நாட்டில் அனுமதிக்கமுடியாது.
இந்த செயலை பல இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் செய்து இருப்பது ஆறுதல் தருகிறது. மத அடிப்படை வாதம் என்பது இருபுறமும் கூர்மையுள்ள கத்தி போன்றது என்பதை மதவெறியர்கள் யாராக இருந்தாலும் உணரவேண்டும். சகிப்பின்மையையும், வெறுப்பு அரசியலையும் வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்தவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.