தலையில் தொப்பி.. கூலிங் கிளாஸ் .. அதிமுக அலுவலகத்தில் எம்.ஜி.ஆராக காட்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி..!
|அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை,
அதிமுக வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு இன்று அறிவிக்கப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அவருக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபின் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் அதிமுக அலுவலகத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர் ஒருவர் தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் (கண்ணாடி) ஒன்றை வழங்கினார். அதை எடப்பாடி பழனிசாமி வாங்கி அணிந்து கொண்டு எம்.ஜி.ஆர் தோற்றத்தில் காட்சி அளித்தார். இதைப்பார்த்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தொப்பி மற்றும் கூலிங் கிளாஸை எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் அணிந்திருந்தார்