< Back
மாநில செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை வந்துள்ளதா? என அறிய வங்கியில் குவிந்த பெண்களால் பரபரப்பு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை வந்துள்ளதா? என அறிய வங்கியில் குவிந்த பெண்களால் பரபரப்பு

தினத்தந்தி
|
15 Sep 2023 7:05 PM GMT

அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள வங்கியில் மகளிர் உரிமைத்தொகை வந்துள்ளதா? என அறிய 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கி கணக்கு சரிபார்ப்பு

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் குழப்பம் மற்றும் குறைபாடு ஏற்படாமல் இருக்க கடந்த சில நாட்களாக வங்கி கணக்கு சரிபார்ப்பு பணிகள் நடந்து வந்தன. பின்னர் பயனாளிகளின் வங்கி கணக்குகளை சரிபார்க்க ரூ.1 அனுப்பப்பட்டது. இந்த நிலையில், திட்டம் தொடங்கப்படும் நாளான்று அனைத்து வங்கி கணக்குக்கும் ஒரே நேரத்தில் தொகையை விடுவித்தால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால், அதை தவிர்க்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவு பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேற்று முன்தினமே ரூ.1,000 உரிமை தொகை விடுவிக்கப்பட்டது. பயனாளிகளுக்கு இதுகுறித்த குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டன.

பெண்கள் மகிழ்ச்சி

வங்கிகளும் அந்த தொகை வைப்பு செய்யப்பட்டதற்கான குறுஞ்செய்திகளை பயனாளிகளுக்கு அனுப்பின. அறிவித்த நாளுக்கு முன்பாகவே ரூ.1,000 வந்து சேர்ந்ததால் பெண்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் பலரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வரவில்லை என்றவுடன் நமக்கு அரசின் தொகை கிடைக்காமல் போய் விட்டது என எண்ணி வருத்தம் அடைந்தனர். இந்த நிலையில் அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள வங்கியில் குவிந்த பெண்கள் தங்களது வங்கி கணக்கு புத்தகத்தை வங்கியில் கொடுத்து வரவு-செலவை பதிவு செய்து பார்த்தபோது பலருக்கு ரூ.1,000 ஏறியது தெரியவந்தது.

இதனை அறிந்த மேலும் பலர் வங்கி புத்தகத்தை எடுத்து வந்து வரவு-செலவு பதிவு செய்து பார்த்து நிம்மதி அடைந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது பலரது வங்கி கணக்கு புத்தகத்துடன் செல்போன் எண் இணைக்காமல் இருப்பதால் குறுஞ்செய்தி வங்கியில் இருந்து வரவில்லை என தெரிவித்தனர். திடீரென 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வங்கியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்