தேனி
வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்:அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மனு
|வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் மனு கொடுத்தனர்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமையில் நிர்வாகிகள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். பின்னர் கனிம வளத்துறை அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், "ஆண்டிப்பட்டி தாலுகா மரிக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதிக்கு அருகில் சட்டவிதிமுறைகளுக்கு புறம்பாக உடைகல் மறறும் கிராவல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. வனவிலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும் என்று தெரிந்தும் வெடி வைத்து தகர்த்து மண், கல் அள்ளப்பட்டு வருகிறது. கனிமவளத்துறை கொடுத்த அனுமதி சீட்டுகளை திருத்தம் செய்து ஒரே சீட்டில் 4 நாட்கள் வரை பயன்படுத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர். வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் வன விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இப்பகுதியில் செயல்படும் குவாரிகளை ஆய்வு செய்து, வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தனர்.